புனித அந்தோனியார் தேர் பவனி
குத்தாலம் அருகே புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா , 50 அடி உயர புதிய கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு கோலாகலமாக தேர் பவனி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கீழ்மாந்தை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து வந்தனர் . பின்னர் ஆலயத்தின் அருகே புதியதாக அமைக்கப்பட்டிருந்த 50 அடி உயரம் கொண்ட திருக்கொடிக்கம்பத்தில் புனித சடங்குகள் செய்யப்பட்ட நிலையில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் கொடியினை ஏற்றி வைத்து அருகே அமைக்கப்பட்டிருந்த புனித அந்தோணியார் சிலையினை திறந்து வைத்தார். மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தாசிஸ் ராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் பலர் முன்னிலையில் கூட்டாக இணைந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் உலக அமைதி மற்றும் நன்மை வேண்டி பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு புனிதம் செய்யப்பட்ட தேரில் புனித அந்தோனியார் எழுந்தருள வானவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க தேர்பவனி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.