போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் எம்.பி., அறிவுறுத்தல்
ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு, குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி, ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் ஆரணி எம்.பி., தரணிவேந்தன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம், துாய்மை பாரத இயக்கம் என மத்திய, மாநில அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.அனைத்து துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, குழுவினர் விளக்கம் கேட்டறிந்தனர்.மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம், குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கேட்டனர்.மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் அருகில் உள்ள கடைகளில், போலீசார் திடீர் சோதனை நடத்தி, போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகாய் சார்பில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.அனைத்து ஓட்டல்களிலும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தி, தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிய வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., அறிவுறுத்தினார்.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, ஒன்றிய சேர்மன்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.