திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. வாணாபுரம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) நாகராஜ் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, தனி தாசில்தார் அனந்தசயனன், ஆய்வாளர் ரவிகணேசன், செயல் அலுவலர் பாக்யராஜ் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், 28 லட்சத்து 86 ஆயிரத்து 581 ரூபாய் பணம், 85 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி இருந்தது. தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் பணம், நகைகள் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது. மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.