ஆண்டிபட்டி அருகே சுருளி அருவிக்கு சுற்றுலா வந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பள்ளிப் பேருந்து விபத்து
ஆசிரியர்கள் சுகன்யா (30), சரண்யா (38), தங்கம் (53), முத்துமாரி (34), ஷோபா (36) ஆகியோருக்கும், மாணவ - மாணவர்கள்சஞ்சனா (8), ஸ்டெபி (11), கிருஷ்ணரிஷி (13), சுர்ஜித் (9), ஆதிரா (13), அபிஷேக் (13), ஜெர்பின்ஜீனு (11), ரித்திக் (13), லிபிஷா (10), ரோசிக் (11) மற்றும் ஓட்டுநர் புரோசன் (30) ஆகியோருக்கு காயம்
தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா வந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பள்ளிப் பேருந்து இன்று வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. நாகர்கோவில் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு விக்னேஷ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்தில் நேற்று தேனிக்கு சுற்றுலா கிளம்பினர். அந்தப் பேருந்தில் ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் உட்பட மொத்தம் 51 பேர் பயணித்தனர். பேருந்தை மார்த்தாண்டம் அருகே ஆத்தூரைச் சேர்ந்த புரோசன் (30) என்பவர் ஓட்டி வந்தார். இன்று (செப்.28) காலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடந்து குன்னூர் அருகே உள்ள டோல்கேட்டை பேருந்து நெருங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறியது. இதில் சாலையியைவிட்டு விலகி அருகில் உள்ள வயலில் இறங்கிய பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக க.விலக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக அருகில் இருந்தவர்களும், அந்த வழியாக மற்ற வாகனங்களில் சென்றவர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜன்னல் வழியே மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மீட்கப்பட்டனர். இதில், ஆசிரியர்கள் சுகன்யா (30), சரண்யா (38), தங்கம் (53), முத்துமாரி (34), ஷோபா (36) ஆகியோருக்கும், மாணவ - மாணவியர் சஞ்சனா (8), ஸ்டெபி (11), கிருஷ்ணரிஷி (13), சுர்ஜித் (9), ஆதிரா (13), அபிஷேக் (13), ஜெர்பின்ஜீனு (11), ரித்திக் (13), லிபிஷா (10), ரோசிக் (11) மற்றும் ஓட்டுநர் புரோசன் (30) உள்ளிட்ட 16 பேருக்கு தலை, கால் உள்ளிட்ட பல இடங்களிலும் லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ''தேனி அருகே உள்ள சுருளி அருவிக்கு மாணவ - மாணவியருடன் சுற்றுலா வந்தோம். எதிர்பாராமல் பேருந்து விபத்தில் சிக்கி விட்டது. நல்லவேளையாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை' என்றனர்.