குன்னமலை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிப்பது நம் அனைவரது கடமை ஆகும். தமிழ்நாடு அரசும் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

Update: 2024-10-02 17:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், குன்னமலை கிராமத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் கே.பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தில் பேசுகையில்... தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத்தை திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை உயர்வு, அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை, அறிவியல், தொழில் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு மற்றும் மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம், ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிப்பது நம் அனைவரது கடமை ஆகும். தமிழ்நாடு அரசும் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.நம் கிராமம் மற்றும் நம் குழந்தைகளை தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். பெண் குழந்தைகள் கல்வி கற்று சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உருவாகி வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் சுய தொழில் தொடங்கிட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடனுதவி வழங்கி வருகின்றார்கள். மேலும் சுற்றுப்புற சுகாதாரம் என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும். வீடுகளில் தனி நபர் கழிப்பிடங்களை பயன்படுத்திட வேண்டும். நெகிழி பைகளின் பயன்பாட்டினை தவிர்த்து அனைவரும் மஞ்ச பை மற்றும் துணி பைகளை பயன்படுத்திட வேண்டும். நெகிழி பைகளை ஒழித்திட அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும். வீடுகளில் குடிநீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். நீர் தேக்காத வகையில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பெண் குழந்தை திருமணத்தை தடுத்திட புகார் அளிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்திட வேண்டும். மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு அவசர கால சிகிச்சைக்கு 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கால்நடை அவரச ஊர்தி சேவையை பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.தொடர்ந்து, இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை 2023-24. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி மற்றும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News