தொடர்ந்து குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்
தற்பொழுது முல்லைப் பெரியாறு மற்றும் தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு முல்லைபெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர் வரத்து கிடைக்கும். தற்போது மழை இல்லாததால் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர் மட்டும் வைகை அணைக்கு வருகிறது.அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் வினாடிக்கு 900 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டு இன்றளவும் தொடர்கிறது.பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக நிலங்களுக்கு செப்டம்பர் 15 முதல் வினாடிக்கு 1130 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. செப்.15ல் 61.48 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 56.63 அடியாக இருந்தது அணை மொத்தஉயரம் 71 அடி. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1437 கன அடி. பாசனம் மற்றும் குடிநீருக்காக வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 2099 கன அடி. நீர் வரத்தை விட வெளியேறும் நீரின் அளவு அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.