ஸ்ரீ னிவாச பெருமாள் கோயிலில் தேர் திருவிழா.
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ அலர்மேலு மங்கை சமேத ஸ்ரீ கில்லா ஸ்ரீ னிவாச பெருமாள் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது.
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ அலர்மேலு மங்கை சமேத ஸ்ரீ கில்லா ஸ்ரீ னிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி காலை , மாலை இருவேளையும் அம்ச வாகனம் , சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் , நாக வாகனம் , கருட வாகனம் , யானை வாகனம், குதிரை வாகனம், இந்திர வாகனம் , சூரிய பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி உற்சவர் பெருமாளை தாயாருடன் மலர்களால் அலங்கரித்து பெரிய மர தேரில் ஏற்றினர்.தேரை திரளாக பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதிகளான சின்னக்கடை தெரு, பழனி ஆண்டவர் கோவில் தெரு, பாட்ஷா தெரு, பெரிய ஜெயின் தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்து அடைந்தது . பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்கும்போது கோவிந்தா , சீனிவாசா நாராயணா , பெருமாளே என கோஷங்கள் எழுப்பி வழிபாடு செய்து இழுத்தனர். விழாவில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன், ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி ,உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹரிகரன், ஆய்வாளர் மணிகண்ட பிரபு, அறங்காவலர் குழு தலைவர் லதா பாபு, அறங்காவலர்கள் உமா பாண்டியன், சசி பாபு மற்றும் நிர்வாகிகள் , உபயதாரர்கள் செய்திருந்தனர்.