மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது
குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியை சேர்ந்தவர் ஞானகுரு (65). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் தவமணியை அதே ஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் (35) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ராஜேந்திரனுக்கு மது அருந்து பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த தவமணி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை விட்டு பிரிந்து தனது தந்தையின் வீட்டின் அருகே உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மது போதையில் ஞான குருவின் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானகுருவை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஞானகுருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் முதலுதவி சிகிச்சை அளிக்கும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது. குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.