கண்ணமங்கலம் விவசாயிகள் கோரிக்கை
ஆரணி அக்.18: கண்ணமங்கலம் நாகநதயில் கட்டப்பட்டுள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷெல்டர்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் நாகநதயில் கட்டப்பட்டுள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷெல்டர்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளின் இடை யே நாகநதி செல்கிறது. ஜவ்வாது மலைத்தொடரில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட அமிர்தி, அரசம்பட்டு, கண்ணமங்கலம் வழியாக நாகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த தண்ணீர் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 1933ம் வருடம் ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து வரும் நீர் கொளத்தூர் ஏரி நிரம்பி அதிலிருந்து வரும் உபரிநீர் கண்ணமங்கலம் ஏரி என தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் நலன் கருதி சில வருடங்களுக்கு முன்பு சிங்கிரி கோயில் தடுப்பளை ₹86லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. கண்ணமங்கலம் ஏரிக்கு ₹75லட்சத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில் கண்ணமங்கலம் தடுப்பணை கட்டப்பட்டு சில வருடங்களே ஆன நிலையில் அதன் ஷெல்டர்கள் பழுதடைந்து மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் நதியில் வரும் நீர் ஏரிக்கு வராமல் வீணாகிறது எனவும், சிங்கிரி கோயில் தடுப்பணையும் ஷெல்டர்கள் பல நேரங்களில் திறக்கப்படாமல் மூடி வைத்திருப்பதால் ஏரிகளுக்கு நீர் சரியாக வருவதில்லை எனவும், பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஏரியில் மீன் ஏலம் எடுத்தவர்களுக்கு சாதகமாக தண்ணீரை திறப்பதும், மூடுவதுமாக உள்ளனர் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், பருவமழை தொடங்கி விட்டதால் தடுப்பணை ஷெல்டர்களை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏரிகளில் மீன் வளர்க்க ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.