நல்லூரில் தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தில் முப்பெரும் விழா
எம்எல்ஏ மாணிக்கம், மருத்துவர் கலையரசன் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நல்லூரில் ஹெட்ஸ் தொண்டு நிறுவன 32 ஆம் ஆண்டு துவக்க விழா, முதியோர் இல்ல 23 ஆம் ஆண்டு துவக்க விழா, மேம்படுத்தப்பட்ட முதியோர் இல்ல திறப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. ஹெட்ஸ் தொண்டு நிறுவன செயலாளார் பழனியம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட முதியோர் இல்லத்தினை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினர். தொண்டு நிறுவன பொருளாளர் டாக்டர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து முதியோர்களுக்கு வேஷ்டி சேலைகள், பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் எம்எல்ஏ மாணிக்கம் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவழகன், புவனேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் காலா குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஹெட்ஸ் தொண்டு நிறுவனர் திட்ட அலுவலர் அசோக் குமார் நன்றி தெரிவித்தார்.