குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (50). இவர் பாலூர் பகுதியில் பழைய இரும்பு சாமான்கள் விற்க்கும் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இன்று (8-ம் தேதி) காலை பாலூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜேஷ் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கருங்கல் போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ராஜேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.