காவிரி ரத யாத்திரைக்கு காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை வரவேற்பு

14 ஆம் ஆண்டு காவிரி ரத யாத்திரை

Update: 2024-11-09 06:33 GMT
அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்தும் 14 ஆம் ஆண்டு காவிரி ரத யாத்திரை இந்த ஆண்டு தலைக்காவிரியான குடகு மலையிலிருந்து தொடங்கி பல மாவட்டங்களின் வழியாக திருச்சி தொட்டியம் , முசிறி வழியாக கரூர் மாவட்டம் குளித்தலைக்கு வருகை புரிந்தது. அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் இணைச்செயலாளர் அருள்வேலன்ஜி தலைமையில் வாழைக்காய் வியாபாரி சேட் , ராமகிருஷ்ணன், கருணாநிதி, ஆனந்த், கல்யாண வெங்கட்ராமன், மகாவிஷ்ணு , தியானேஷ் , வெங்கடேஷ் , வீரமணி , திருமுருகன் மற்றும் பொதுமக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் சிவராமானந்தாபுரி , தவத்திரு.சுவாமி ஆதித்யானந்தா சரஸ்வதி , கடலூர் சுவாமி மேகானந்தா சரஸ்வதி , மாதாஜி ஸ்ரீ வித்யானந்தா சரஸ்வதி உட்பட 25க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் இந்த ரத யாத்திரையில் உடன் வந்திருந்தனர். சிவராமானந்தாபுரி சுவாமி ஜி சிறப்புரை வழங்கும்போது வடமாநிலங்களில் கங்கை , யமுனை போன்ற அனைத்து நதிகளும் புனிதமாக வணங்கி பாதுகாக்கப்படுகிறது. அதேபோல நாமும் நமது அன்னை காவிரி நதியினை தொழிற்சாலை கழிவுகள் , பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் கலக்காமல் பாதுகாத்திட வேண்டும். இந்த குளித்தலை பகுதியில் படித்துறையின் ஓரத்தில் துணிகள் போடுவதற்கு தொட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பலகைகளை அமைத்திட வேண்டுமென பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். அதன் பின்னர் காவேரி தாய்க்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று காவிரி நதிக்கு ஆராத்தி நடைபெற்றது. அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு காவிரி , தாமிரபரணி , நொய்யல் உள்ளிட்ட நதிகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சுமார் 2000 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை சன்னியாசிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த காவிரி ரத யாத்திரைக்கு இந்த பகுதியில் சிறப்பாக வரவேற்பு மற்றும் வழிபாடு செய்து வருகின்ற பொறுப்பாளர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Similar News