சென்னையில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 53 மி.மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று (டிச.12) மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் புதன்கிழமை இரவு முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை அதிகாலை 4 மணியிலிருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக, காலையில் பணிகளுக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழைநீர் பல இடங்களில் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதால், சாலைகளில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றன. சென்னையில், கிண்டி, கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, அடையாறு, எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நெற்குன்றம், வானகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் விடாது மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், சராசரியாக 53 மி.மீ மழை பதிவாகியிருப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 15 விமானங்களின் புறப்பாடு தாமதமாகின.