வலைதளத்தில் வதந்தி: அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-12-12 13:24 GMT
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. சென்னையில் ஃபெஞ்சல் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில், சென்னையில், மெரினா கடற்கரை அருகில் மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டது. அந்த காணொளியை அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்கசிவு, தமிழக முதல்வர் அஜாக்கிரதையாக இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அந்த வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் அக்குழு புகார் அளித்தது. இதற்கிடையில், அந்த பதிவை சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும், அவர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பியதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News