திருக்குறள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் நூலகத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருக்குறள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலகத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருக்குறள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை கடந்த 2000ம் ஆண்டு, டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இதனை வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தி திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்தல், திருக்குறள் விளக்க உரைகளையும், திருக்குறள் தொடர்பான புகைப்படங்களையும் பொதுமக்கள் பார்வையிடம் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழர்களின் அறிவின் அடையாளமாக தமிழர்களுக்கென்று தனித்த அடையாளமாக உலக அரங்கில் இருக்கக்கூடிய ஒரு பண்பாட்டு அடையாளம் நமது திருக்குறள். உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். உலக அளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் என்பது சமயம் சார்ந்த நூல்கள். ஆனால் அந்த எண்ணிக்கைக்கு பிறகு சமயச்சார்பற்ற ஒரு நூல் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் அது திருக்குறள் தான். திருக்குறளிலில் எந்த மன்னரின் பெயரோ, எந்த நாட்டினுடைய பெயரோ, எந்த இனத்தின் பெயரும் இல்லை, அது எழுதப்பட்ட தமிழ் மொழியினுடைய பெயர் கூட அதில் இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கென்று சட்டங்கள் இருக்கின்றது. உலகம் முழுமைக்கும் மனிதர்களுடைய அறத்தை வலியுறுத்தக்கூடிய வகையில், அந்த சட்டத்தை மற்றொருவர் மீது திணிக்காத வகையில், நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஒரு சட்டம் ஒன்று இருக்கும் என்றால் அது திருக்குறளை போல் வேறு ஒன்று இல்லை என்று உலக தத்துவ நூல்களை ஆய்வு செய்த மாற்று மொழி அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட திருக்குறளை தமிழர்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். சிறந்த 10 திருக்குறளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் கூட வாழ்க்கை மிகப்பெரிய மாற்றமடையும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட திருக்குறளை நாம் எல்லோரும் கொண்டாட வேண்டும். மொழி கடந்து, இனம் கடந்து, சாதி சமய வேற்றுமை கடந்து, தமிழர்கள் ஓர் இனமாக பெருமை கொள்வதற்கு ஒற்றை நூல் இருக்கின்றது என்றால் அது திருக்குறள் தான். தமிழ் உலகுக்கு அளிக்கப்பட்ட அந்த கொடையை எண்ணி முதலில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.