புதிய கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
புதிய கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 20,000 க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள், 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆண்கள், பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வேலை தேடி, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு போதிய அளவில் கழிப்பறைகள் இல்லாததால் ஆண்கள், பெண்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, மறைமலைநகர் சிப்காட் செல்லும் பெரியார் சாலையில் நகராட்சி சார்பில், 'துாய்மை இந்தியா 2.0' திட்டத்தின் கீழ், புதிய வடிவமைப்பில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கழிப்பறை கட்டும் பணிகள் நிறைவடைந்தன. ஆண்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. தண்ணீர் வசதிக்கு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, வீணாகி வரும் இந்த கழிப்பறையை, உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.