சம்பா சாகுபடி நெற்பயிரில் இலைசுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேளாண்மை

Update: 2024-12-27 11:04 GMT
இலைசுருட்டுப் புழு தாக்குதலில் இருந்து சம்பா சாகுபடியில்                  நெற்பயிரை காப்பாற்றுவது எப்படி  என சேதுபாவாசத்திரம், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் தற்போது            இலை சுருட்டுப் புழுவின் தாக்கம் ஏற்படுகிறது. மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் கூடிய இந்த இலை சுருட்டுப் புழுக்கள், இலைகளை நீளவாக்கில் சுருட்டியும் மடக்கியும் இலைகளுக்குள் பதுங்கி இருந்து, இலை மடலை சுரண்டி உண்கிறது . இதனால் பாதிக்கப்பட்ட இலைகள் வெண்மையாள திட்டுகளாகவும், காய்ந்து சருகு போன்றும் காட்சியளிக்கின்றன. வயல் முழுவதும் தாய் அந்தப்பூச்சிகள் பறந்தவாறு தென்படுகின்றன. மஞ்சளான வெள்ளை நிறத்தில் காணப்படும். புழுவானது பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும்.  முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். அந்துப்பூச்சியானது  மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் நிறைய கருப்பு அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்தில்  கருப்பு நிறப் பட்டையான கோடுடனும் காணப்படும்.  ஆரம்ப நிலையில் வயலின் ஒரு சில இடங்களில் காணப்பட்ட இப்பாதிப்பானது 5 முதல் 6 நாட்களுக்குள் வயல் முழுவதும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மாலை நேரங்களில் விளக்குப் பொறி அமைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக                தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக் களைகளை நீக்க வேண்டும். பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலே மற்றும் பேசிலோமைசிஸ் ஆகிய பூஞ்சைகளில் ஏதேனும் ஒன்றினை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம். மேலும், புழுக்களை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 500 மில்லி குளோர்பைரிபாஸ் அல்லது 400 மில்லி புரொபினோபாஸ் அல்லது 60 மில்லி குளோரான்ட்ராளனிப்ரோல் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் வயலின் அனைத்து பகுதிகள் மற்றும் வரப்பு, வாய்க்கால்கள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Similar News