சமையல் செய்யும்போது காஸ் சிலிண்டர் வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு
கிரைம்
தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது காஸ் சிலிண்டர் வெடித்ததில் இளம்பெண் உயிரிழந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகர் 7-ம் தெருவைச் சேர்ந்தவர் ஹரீஷ்(28). செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(27). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், டிச.17-ம் தேதி இரவு கீர்த்திகா வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது, காஸ் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து வெடித்ததில், கீர்த்திகா உடலில் தீப்பிடித்தது. இதனால் கீர்த்திகா அலறிய சப்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், தீக்காயமடைந்த கீர்த்திகாவை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.