பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி.
தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் வழிபட, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் பதிவு செய்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் நேற்று (3-ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜராகினர். முன்னதாக கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பது நாடறிந்த விவரம். நாடெங்கும் இன்று பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்தை ஆளும் திமுக அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது. தன் ஆட்சிக் காலத்தில் தனது கட்சிக்காரர்களை அடக்கி வைக்காதது தான் இதற்கெல்லாம் காரணம். கட்சியிலும், ஆட்சியிலும் பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவர்களை தட்டிக் கேட்கிற அருகதை இல்லாதவராக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் இத்தனை பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவியின் பரிதாப நிலைக்குக் காரணமும் திமுக நிர்வாகிகள் தொடர்பு தான். இன்று, ‘சார் யார்?’ என்று பலரும் கேட்கும் நிலையில், அவர் யார் என்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாக சொல்லி விட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், தமிழக அரசு மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜக-வின் மகளிர் அணி சார்பில் மதுரையில் தொடங்கி 8 நாள் நீதி கேட்டு பயணம் மேற்கொள்கிறோம். முடிவில் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம். ஆட்சிக்கு, அதிகாரத்துக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்து நடைபெறும். இந்நிகழ்ச்சியின்போது, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் ஐஸ்வரியும் முருகன் வெங்கட்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.