சேலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நிர்வாண நிலையில் பிணமாக தொங்கினார்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெரிய ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அருள்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர்களுடைய அலுவலகம் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் வணிக வளாகத்தில் உள்ளது. இதனிடையே நேற்று காலை அந்த அலுவலகத்தை திறந்து சுத்தம் செய்வதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். அப்போது அலுவலகத்திற்குள் அருள்குமார் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி, இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்ததால் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு அருள்குமார் பார்சலில் சாப்பாடு வாங்கி கொண்டு வரும் காட்சி பதிவாகி உள்ளது. ஆனால் அதனை அவர் சாப்பிடாமல் மேஜையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருள்குமார் தொழில் நிமித்தமாக தெரிந்தவர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அதனை அடைக்க முடியாமல் அவர் சிரமம் அடைந்துள்ளார். கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.