சேலத்தில் குடிநீர் குழாய் இணைப்பு விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் சாலை மறியல்

2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Update: 2025-01-05 04:04 GMT
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டில் உள்ள ஆண்டிப்பட்டி ஹவுசிங் போர்டில் 456 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் புதிதாக 2 குடிநீர் குழாய்களை அந்த வார்டு கவுன்சிலர் புனிதா அமைத்து கொடுத்தார். தெரிந்த நபர்கள் சிலருக்காக இந்த இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று சேலம்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பெரியார் நினைவு வளைவு முன்பு பெண்கள் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்த குடிநீர் குழாய்களை அகற்ற கோரி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் அனைவருடைய வசதிக்காக தான் குடிநீர் குழாய் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என்றனர். இதனிடையே கவுன்சிலர் புனிதாவுக்கு ஆதரவாக 25-க்கும் மேற்பட்ட பெண்களும் அந்த பகுதியில் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இருதரப்பை சேர்ந்த 2 பெண்கள் திடீரென உடல்களில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு வந்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைவருக்கும் குடிநீர் கிடைக்க குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News