கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (6ம் தேதி) வெளியிடப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு அக்., 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஜன., 1ம் தேதி தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது.கடந்த 2024ம் ஆண்டு நவ., 28ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி (தனி), உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.