நாகை மாவட்ட வருவாய் அலுவலரின் முகாம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில்

தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கோரிக்கை

Update: 2025-01-05 05:10 GMT
நாகை மாவட்ட வளர்ச்சி குழும தலைவர் என்.பி.பாஸ்கரன், நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை மாவட்ட வளர்ச்சிக்காக, தகவல் தொழில் நுட்ப பூங்கா (Tidel Park) அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கு நாகை - நாகூர் மெயின் ரோட்டில், மாவட்ட வருவாய் அலுவலரின் முகாம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புஞ்சை இடம் உள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க 5 ஏக்கர் 73 சென்ட் இடம் உள்ளது. மேற்படி சர்வே எண் 738, 741, 742, 743 மற்றும் 749/ 2 ஆகிய 5 சர்வே எண்கள் உள்ள இடம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, தமிழக அரசு கல்வி நிறுவனம் மட்டுமே நடத்துவதற்காக மேற்படி இடத்தை கையகப்படுத்தி தந்துள்ளது. ஆனால், தமிழக அரசு அப்போது, அரசு இடத்தை கையகப்படுத்தி தரும்போது, கல்வி நிறுவனங்களுக்கு கையகப்படுத்தும் இடத்தை வேறு பயன்பாட்டிற்கோ அல்லது வாடகைக்கோ விடப்பட்டாலோ, கையகப்படுத்தி தந்த இடங்கள் தாமாகவே அரசுக்கு சொந்தமாகி விடும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. ஆகவே, மேற்படி இடத்தை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, தமிழக அரசுக்கு நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 204 -க்கு வாடகைக்கு விட்டு வாடகையை வசூல் செய்து வருகிறது. மேலும், தற்போது வாடகை பாக்கி உள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை தாருங்கள் என அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். தமிழக அரசு விதிமுறைகள் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு உள்ளதால், மேற்படி இடங்கள் அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தமாகி விட்டது. இதில், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் எந்தவித உரிமையும் கோருவதற்கு உரிமை இல்லை. அதை அவர்கள் இழந்து விட்டார்கள். எனவே, முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான புஞ்சை இடமாக உள்ளது. மேற்படி இடத்தில், தொழில் துறை தொல்லியல் நில எடுப்பு சட்டம் 38/ 1999 மற்றும் ரெஃப்லர் ஆக்ட் படி நிலத்தை கையகப்படுத்தி, தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கு, நாகை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மேற்படி இடத்தை தாங்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது மேற்படி இடத்தில், அரசு நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது, அவ்வாறு உள்ள அந்த இடத்தை கையபடுத்தி, தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். ஏனென்றால் மேற்படி இடத்தை சுற்றி தான் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பள்ளிகள் அமைந்துள்ளன. தேவையான போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகள் யாவும் மிகவும் பொருத்தமாக உள்ளது. மேற்படி இடத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைத்தால், வருங்கால சந்ததியினருக்கு பயன் அளிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் மேற்படி இடத்தை தேர்வு செய்யும் பணிகளை விரிவாக முடித்து, அதற்கான கருத்துருவை அரசுக்கு விரைந்து பரிந்துரைக்க வேண்டும். எனவே, செல்லூர் கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு, தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க முயற்சி செய்வதை கைவிட்டு, நாகை நகரத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் முகாம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள புஞ்சை இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News