ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில்
புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம்
நாகை மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுரையின்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சுத்தானந்த கணேஷ், செந்தில்குமார், ராகுல், ராஜா, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், கீழ்வேளூர் ஒன்றியம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், புகையிலை தடுப்பு நடவடிக்கை பணிகளை நேற்று மேற்கொண்டனர். இதில், புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களை அமுல்படுத்தும் விதமாக, ஒவ்வொரு வணிக வளாகங்களிலும், "புகையிலை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதி" என்ற வாசகம் அடங்கிய விளம்பரப் பலகை வைக்கவும், சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, மின்சார எரியூட்டப்படும் இயந்திரம் ஆகியவைகளை கடைகளில் வைத்திருக்க கூடாது எனவும் வியாபாரிகளிடம் எச்சரிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரியிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளில், புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது . இவ்விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு, சிறைத் தண்டனைக்கு உட்படுத்தபடும் எனவும் எச்சரிக்கைப்பட்டது. மேலும், பொது சுகாதார விதிகளை மீறிய கடைகளுக்கு, பொது சுகாதார சட்டத்தின்படி, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.