கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூரை சேர்ந்தவர் கபில்தேவ்,45; இவரது நிலத்தில் மாட்டுக்கொட்டகைக்கு அருகே தென்னை மட்டையில், நாட்டு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கபில்தேவ் மகன் கார்த்தி,16; பார்த்து, எடுத்துள்ளார். அப்போது கார்த்தி எதிர்பாராத விதமாக டிரிக்கரை அழுத்தியதில், 15 அடி துாரத்தில் நின்றிருந்த கபில்தேவ் மகன் கரண்,13; வலத கையில் குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த கரணை மீட்டு மேல்சிகிச்சைக்காக கோயம்புத்துார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்தனர். அதில், நீலமங்கலம் காலனியை சேர்ந்த ரமேஷ்,40; என்பவருக்கு சொந்தமான நாட்டு துப்பாக்கி என்பதும், சில தினங்களுக்கு முன் வேட்டையை முடித்து விட்டு கபில்தேவ் நிலத்தில் மறைத்து வைத்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து ரமேஷை போலீசார் கைது செய்தனர்.