கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

போராட்டத்தில் ஈடுபட விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

Update: 2025-01-08 05:10 GMT
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், விவசாய சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் எம்.பர்ணபாஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைக்கு ரூ.ஆயிரம் வழங்க வலியுறுத்துவது,வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கான காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும், உடனடியாக இன்சூரன்ஸ் தொகை வழங்க வலியுறுத்துவது, மழை காரணமாக, தற்போது சம்பா சாகுபடி செய்துள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் மற்றும் முழுமையான இன்சூரன்ஸ் வழங்க கேட்டுக் கொள்வது, மானாவரி பகுதியான காமேஸ்வரம், புதுப்பள்ளி, பிரதாபராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடியாக நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, 2023-24 -ம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகையை வழங்க கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 10-ம் தேதி கீழையூர் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வீ.எஸ்.மாசேத்துங், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் டி.பாலாஜி, ஜி.சங்கர், டி.கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News