லாட்டரி டிக்கெட் விற்ற ஒருவர் கைது
லாட்டரி டிக்கெட் விற்ற ஒருவர் கைது... லாட்டரி டிக்கெட், பணம், செல் போன் பறிமுதல்
வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே உள்ள கடவூர் பிரிவு பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் ஏட்டையா முத்துச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அய்யலூர் கடவூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக நின்றிருந்தவரை விசாரிக்க சென்ற போது அவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கரூர் மாவட்டம் சேவாப்பூர் அருகே உள்ள வளையப்பட்டியை சேர்ந்த கண்ணன்(வயது 32) என்பதும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததும், செல்போன் செயலி வாட்ஸ்-ஆப் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போன், 25 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.