புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
காரிமங்கலம் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள புகையிலை கடத்திய இருவர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகேந்திரமங்கலம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக மகேந்திரமங்கலம் காவலர்களுக்கு தகவலின் பேரில் இன்று விடியற்காலை காரிமங்கலம் நெடுஞ்சாலையில் உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிசரக்கு லாரியை காவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல லட்சம் மதிப்பிலான ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து லாரியில் வந்த 2 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன், தேனி மாவட்டத்தை சேர்ந்த பெத்தனசாமி என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து கேரளாவிற்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து இருவரையும் காவலர்கள் கைது செய்து மினிலாரியுடன் புகையிலை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.