குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு, மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் 5,40,033 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் தகவல்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை இன்றைய தினம் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 909 நியாய விலைக்கடைகளில் 4,94,120 தகுதியான குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 45 நியாய விலைக்கடைகளில் 43,593 தகுதியான குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 4 நியாய விலைக்கடைகளில் 1,590 தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 730 தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 958 நியாய விலைக்கடைகளில் 5,40,033 தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோர் மகளிர் மேம்பாட்டிற்காக பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமை பெண் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட சுய உதவிக்குழுக்கள் மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தொழில்கடனுதவி வழங்கி ஊக்குவித்து வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டம் விவசாயம் சார்ந்த பசுமையான மாவட்டம் ஆகும். உழவு தொழில் இம்மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நம் மாவட்டத்திலேயே கரும்பு அதிகளவில் விளைவிக்கப்பட்டு, பொங்கல் தொகுப்பு கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரக்கூடிய வருடம் பசுமையானதாகவும், விவசாயம் செழித்தும் சிறப்பாக அமைய வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்று கொள்ளலாம். அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். உழவர் இல்லை என்றால், உணவு இல்லை என்பதை நாம் உணர்ந்து உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ச.யசோதாதேவி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் செல்வராணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) மு.கிருஷ்ணவேணி, துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) பா.நாகராஜன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.