வனத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு
சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு பகுதியில் குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களை கடித்து காயப்படுத்துவதும், வீடுகளில் ஓடுகளை பிரித்து எறிவதும் போன்ற பல்வேறு சேதங்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. எனவே, குரங்குகளை பிடித்து வெளி மாவட்ட சரணாலயத்திற்கு அனுப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கோடியக்கரை, கோடியக்காடு பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இது குறித்து சமாதான பேச்சு வார்த்தை நேற்று கோடியக்கரை வனத்துறை அலுவலகத்தில், வேதாரண்யம் வட்டாட்சியர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில், கோடியக்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்மணி, கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் ஆனந்தராமன் உள்ளிட்ட இரு கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கோடிக்கரை மற்றும் கோடியக்காடு கிராமத்தில் குரங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், நாளை முதல் இரு கிராமங்களிலும் 5 இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டு குரங்குகளை பிடித்து, திருச்சி மாவட்டம் பச்சைமலை வனப் பகுதியில் விடுவது, வனப்பகுதியில் சாலைகளை அகலப்படுத்த மற்றும் புதுப்பிக்க நெடுஞ்சாலை துறை மூலம் அனுமதி கோரப்பட்டால், தடையில்லாமல் பணி செய்ய அனுமதிப்பது, கோடிக்கரையில் இருந்து வேதாரண்யம் செல்லும் வரை உள்ள அபாயகரமான வளைவுகளில் உள்ள மரங்களை வெட்டி, சாலை முழுமையாக தெரியும் அளவிற்கு பணிகளை செய்து, விபத்துல்லா பயணங்களை பொதுமக்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்வது, தற்காலிக ஏற்பாடாக சாலையில் உள்ள பள்ளங்களை மற்றும் சாலையோரம் உள்ள பள்ளங்களை ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் சீர் செய்து கொள்ள அனுமதிப்பது, வனத்துறை பகுதியில் சுற்றிப் பார்ப்பதற்கு வனத்துறை வாகனம் அல்லாமல் பொதுமக்களின் வாகனங்களையும் அனுமதிப்பது சம்பந்தமான கோரிக்கை விடுக்கப்பட்டது. வருகிற தை அமாவாசை அன்று புனித நீராட வரும் பக்தர்களுக்கு, குரங்குகளுக்கு உணவளிக்காமல் தவிர்க்கமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கோடியக்கரை மற்றும் கோடியக்காடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனால், வனத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஓத்தி வைக்கப்பட்டது.