இஸ்ரோ தலைவராக நாராயணன் நியமனம் - ஜி.கே. வாசன் வாழ்த்து
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வி.நாராயணனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆய்வு மையத்தின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி.நாராயணனை நியமித்தது பாராட்டுக்குரியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்விப் பயின்று இப்போது இஸ்ரோவின் தலைவராக உயர்ந்திருப்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறது. இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக மிகச்சிறப்பாக பணியாற்றியதும், சந்திரயான் 1,2,3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, சுகன்யான் திட்டம் ஆகிய முக்கியத் திட்டங்களில் தனது பங்களிப்பை மிகச்சிறப்பாக மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு நாராயணன் அவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. விண்வெளி ஆராய்ச்சிக்காக பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டதாலும், கடின உழைப்பாலும், தொடர் முயற்சியாலும், அர்ப்பணிப்பாலும், திறமையாலும் இன்றைக்கு இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாட்டின் நாராயணன் இஸ்ரோவின் தலைவரானதால் தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும் ஈடுபடுவார்கள். இஸ்ரோவின் தலைவரான நாராயணன் தொடர்ந்து தனது பணியில் சிறந்து விளங்கி, வெற்றிகள் பெற்று, விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், வாழ்வில் சிறக்கவும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.