யுஜிசி வரைவு விதிமுறைகளை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025-ஐ கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்களிடம் இதன் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலும், முதல் கட்டமாக, நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் பறிப்பதற்கு மத்தியில் ஆட்சி செய்யும் ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிச அரசு தொடர் முயற்சிகளைச் செய்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எளிய மக்களின் கல்வியை கபளீகரம் செய்வதற்கும், சமூகநீதியை பறிப்பதற்கும் செய்த முயற்சிகளை தமிழகம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, எப்படியேனும் அதை தமிழகத்தில் கொண்டுவந்து தமிழகத்தின் கல்வி வளர்ச்சியைத் தடுக்க தனது அனைத்து அதிகாரங்களையும், வழிகளையும் பயன்படுத்துகிறது மத்திய பாஜக அரசு. அண்மையில் (ஜன.6) பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள், மத்திய பாஜக அரசின் கெடு நோக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பல்கலைக்கழகங்களின் தனித்தன்மையை, தன்னாட்சியை ஒழித்து, அனைத்தையும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரால், ஆளுநரின் பெயரால் மத்திய அரசே அபகரிக்கும் திட்டமே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் வரைவு நடைமுறை ஆகும். தரப்படுத்துதல் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளைப் பயன்படுத்தி, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் மீது அதனைத் திணிக்க பல்வேறு வகையான அதிகார வரம்பு மீறல்களைத் தொடர்ந்து செய்துவருகிறது. அதன் மொத்த வெளிப்பாடுதான் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கை. அதனை ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு (FSO-TN)’ முற்றாக நிராகரிக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவும், சமூகநீதியை பாதுகாக்கவும், ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற நிலையை எட்டுவதற்கும் தடையாக அமையும் எதையும் ஒழிப்பது என்று உறுதி ஏற்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025 என்பதைக் கண்டித்தும், மாணவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்களிடம் இதன் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலும், முதல் கட்டமாக, நாளை (ஜன.10) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தவுள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கைகளாக, மாவட்ட அளவில் கருத்தரங்குகளையும், போராட்டங்களையும், கையெழுத்து இயக்கத்தையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், மத்திய அரசு கல்வித் துறை மீது நடத்திவரும் தாக்குதலை வெகு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், அனைத்து வகைப் பிரச்சாரங்களிலும் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.