பெரியாரை கொச்சைப்படுத்திய சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை

தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அது சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Update: 2025-01-09 15:41 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஓர் ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். தமிழக மக்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்ட சமூக நீதியை பெற்றுத் தருவதற்காக பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அத்தகைய போராட்டங்களின் விளைவாகவே பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள். அரசியலில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மலிவான, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஊடக வெளிச்சம் பெற்று வருகிற சீமானை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடைமுறை சாத்தியமே இல்லாத கருத்துகளை கூறி, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிற சீமானின் அரசியலுக்கு முடிவுகட்டுகிற காலம் நெருங்கி விட்டது. எத்தனை தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் ஒரே ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அது சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும். வாய்க்கு வந்தபடி அவர் உளறுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதனாலேயே தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் பெரியாரின் புகழை எள் முனையளவு கூட இவர் போன்றவர்களால் சிதைக்க முடியாது. எனவே, சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News