கோவை: பொங்கல் பண்டிகை - பூக்களின் விலை உயர்வு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதும், தேவை அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இன்று ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000-க்கு விற்பனையானது. கடந்த வாரம் இது ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டது. இதுதவிர, முல்லைப்பூ கிலோ ரூ.1,800-க்கும், ஜாதிப்பூ ரூ.1,200-க்கும், காக்கடான் மல்லி (வாசனையில்லாதது) ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180 முதல் ரூ.200 வரை, கலர் ரோஸ் வகைகள் ரூ.200 முதல் ரூ.220 வரை விற்கப்படுகிறது. மேலும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகைக்கு வீடுகளின் நிலைகளில் தொங்க விடுவதற்காக பூளைப்பூ கட்டுக்கட்டாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டு பூளைப்பூ ரூ.10 முதல் ரூ.30 வரை, துளசி ஒரு கட்டு ரூ.20 முதல் ரூ.30, ஆவாரம்பூ கட்டு ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்கப்பட்டது.வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், தேவை இருப்பதால் பொதுமக்கள் பூ மார்க்கெட்டில் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.