முண்டன்துறைக்கு தேசிய பசுமைப் படை மாணவர்கள் களப்பயணம்!

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த தேசிய பசுமைப்படை மாணவர்கள் களக்காடு முண்டந்துறைக்கு 3 நாட்கள் களப்பயணம் சென்றனர்.

Update: 2025-01-13 07:16 GMT
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த தேசிய பசுமைப்படை மாணவர்கள் களக்காடு முண்டந்துறைக்கு 3 நாட்கள் களப்பயணம் சென்றனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை மாணவர்கள்களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பற்றி அறிய 3 நாட்கள் களப்பயணமாக சென்றனர். இதில் முதல் நாள் முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில், வனச்சரகர் கல்யாணி, வன காப்பாளர் அசோக்குமார்,கோவில்பட்டி தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் ஆகியோர் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றியும், வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு பற்றிய மரம் வளர்ப்பது அவசியம் மற்றும் வன உயிர்களின் பண்முக வளர்ச்சி, பயன்கள் பற்றி எடுத்து கூறினர். மாணவர்கள் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின்பு சேர்வலார் டேம் பகுதிக்கு அழைத்துச் சென்று கள ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் முண்டந்துறை முதல் மூலகசம் வரை மலையேற்ற நடைப்பயிற்சியும், பாபநாசம் அணைப்பகுதி உட்பட வனக்காப்பாளர் அசோக்குமார்  வனகாவலர் ஜெயக்குமார், வனவர் பெத்துராஜ், அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கையுடன் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து அம்பாசமுத்திரம் புலிகள் திட்ட துணை இயக்குநர் வன உயிரினக்காப்பாளர் இளையராஜா முகாமை பார்வையிட்டு களக்காடு காப்பகத்தினைப் பற்றியும், வனத்தின் அவசியம் பற்றியும் வனத்தினைப் பாதுகாப்பது பற்றிய வழிமுறைகளைப் பற்றியும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அறிவுரை வழங்கினார்.  தொடர்ந்து மாணவர்களிடன் கேள்வி-பதில், கலந்துரையாடல் மேற்கொண்டு வாழ்த்தி பேசினார். அதனைத் தொடந்து சூழலியலாளர் ஶ்ரீதர் கலந்து கொண்டு குரங்குகள், அணிகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் புலிகள் பற்றியும் அதன் அவசியத்தினைப் பற்றியும் பயிற்சி அளித்தார். பின்பு மாணவர்களை பாபநாசம், அகஸ்தியர் அருவிக்கு அழைத்துச் சென்று பார்வையிட்டு அழைத்து வரப்பட்டனர். மூன்றாம் நாள் பறவைகள் மற்றும் மிற இன பூச்சிகளின் வகைளைப் பற்றியும், அதன் வேறுபாடு, அகஸ்தியர் நகர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பின்பு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோவில் சென்று வரப்பட்டது.  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட வனப்பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவில் தேசிய பசுமைப் படை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வாழ்த்து பெற்றனர், தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு துணை இயக்குநர் மற்றும் வன்உயரினக்காப்பாளர், புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் இளையராஜா தலைமையில் நினைவுப்பரிசும், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.  இதில் கருப்பூர், இளம் புவனம் அரசு உயர்நிலை பள்ளிகள் ஊத்துப்பட்டி அ.மே. நி.பள்ளி, கழுகுமலைஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 10 பள்ளிகளிலிருந்து 50 தேசிய பசுமைப் படை மாணவர்கள், 10 பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, ஜெயகுமார்,மாணிக்கராஜ் உட்பட பசுமை ஆர்வளர் சுரேஷ் குமார்,சூழல் ஆர்வலர் இராமமூர்த்தி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முண்டந்துறை வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  அனைத்து தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கும் அரசு முத்துரை பதித்த பனியன்கள், சில்வர் தண்ணீர் பாட்டில்கள், மஞ்சள் பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை கோவில்பட்டி தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் செய்திருந்தார்.

Similar News