பொங்கல் பண்டிகைக்காக ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது
ஏரியில் மூழ்கி சிறுமி மற்றும் சிறுவன் பலி
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராகிப்பட்டி பகுதியில் விவசாயிகள் இன்று மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஏரியில் இன்று காலை தங்களது மாடுகள், ஆடுகளை குளிப்பாட்டினர். இந்நிலையில் ராக்கி பட்டியைச் சேர்ந்த சங்கரின் மகள் ஸ்ரீ கவி, மகேஷ்குமாரின் மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களது ஆடுகளை ஏரியில் இன்று குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீ கவி, பிரதீப் ராஜா ஆகியோர் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் சகதியில் சிக்கிய இருவரும் சத்தம் போட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் காப்பாற்ற முயற்ச்சித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கினர். பின்னர் இருவரையும் அப்பகுதி மக்கள் தேடிய போது இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.