சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
போராட்டம்
ஓரத்தநாடு காவல் சரகத்திற்குட்பட்ட நெய்வாசல் பகுதி யில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை செயல் பட்டு வருகிறது. இந்த பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாகவும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் ஓரத்தநாடு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நெய்வாசல் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் நேற்று காலை தஞ்சை-மன்னார்குடி பிரதான சாலை நெய்வாசல் கடைத்தெரு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷனாஸ் இலியாஸ், இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டகிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சட்டவிரோத மது விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்வதாகவும், நெய்வாசல் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதாகவும் போலீஸ் அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதியளித்தனர். . தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக த அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.