காவல்துறையினர் கண்முன் தலித் சமூக இளைஞர் படுகொலை

பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.;

Update: 2025-01-18 15:20 GMT
பெரம்பலூரில் காவல்துறையினர் கண்முன் தலித் சமூக இளைஞர் படுகொலை! சட்டத்திற்குப் புறம்பான காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கையே படுகொலைக்குக் காரணம். -எஸ்டிபிஐ கட்சி கண்டனம் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ஹஸ்ஸான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பெரம்​பலூர் மாவட்டம் வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​த, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர், காவல்துறையினர் கண் முன்பாகவே மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக, தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த புகாரின் பேரில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் காவல் நிலையம் அழைக்காமல், வேறு ஒரு இடத்தில் வைத்து காவல்துறை அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தபோது, அவர்கள் கண் முன்னே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்த இளைஞர் அளித்த புகார் தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல், சட்டத்திற்குப் புறம்பாக காவல்துறை அதிகாரிகளே கட்டப்பஞ்சாயத்து மூலம் பிரச்சனைகளை எதிர்கொண்டது தான் இந்தப் படுகொலைக்குக் காரணம். இந்த படுகொலைக்கு காவல்துறையே முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த படுகொலை தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக, தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலைகள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. தமிழக அரசு இதுபோன்ற படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Similar News