முல்லைப்பூ சாகுபடியை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு
வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை;
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம்,குரவப்புலம் மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ , சாகுபடி நடைபெற்று வருகிறது. இத்தொழிலில்,, சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் காலை 4 மணி முதல் 10 மணி வரை முல்லை பூவை பறித்து, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண நாட்கள் போன்ற நாட்களில் மட்டுமே பூக்களின் விலை கிலோ ரூ.500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மற்ற நாட்களில் ரூ.100 முதல் 250 வரை விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் மட்டும் விலை ஏறுகிறது. மற்ற நாட்களில் விலை இல்லாததால், ஒரு கிலோ முல்லை பூ எடுக்க கூலி ரூ.50 கொடுக்க வேண்டி உள்ளதால், முல்லை விவசாயம் பெரிய லாபம் இல்லை. கடந்த மாதம் பெய்த மழையாலும், தற்போது பெய்து வரும் பனிப்பொழிவாளும், பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வேதாரண்யம் பகுதியில் மிகக் குறைந்த அளவே முல்லை பூ கிடைக்கிறது. இது எடுப்பதற்கு ஆள் கூலி கூட கொடுக்க முடியாத நிலையில், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர். வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே விலை ஏற்றம் காணும் இந்த தொழிலை, நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முல்லைப் பூ சாகுபடியை மேம்படுத்த அரசு கூட்டுறவு வங்கிகள் மூலமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கடனுதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.