பரமத்தி வேலூர், ஜன.19: கீரம்பூர் அருகே புலவர்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (65) விவசாயி. இவர், வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கீரம்பூருக்கு மாட்டு தீவனம் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார். கீரம்பூர் நான்கு சாலை சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது கரூரிலிருந்து சேலம் நோக்கி வந்த வாகனம் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்து உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரான ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த சதீஷ்குமாரை (40) போலீஸார் கைது செய்தனர்.