லாரி உரிமையாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருள் வலியுறுத்தல்

லாரி உரிமையாளர்களின் தொழிலை அரசு அங்கீகரித்து, தனி நலவாரியம் அமைத்து வழங்க வேண்டும், இது லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பாக அமையும்;

Update: 2026-01-31 14:33 GMT
மத்திய பட்ஜெட்டில் லாரி தொழிலுக்கு எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் குறித்து நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..சரக்கு வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆன்லைன் வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.இந்தியா முழுவதும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வாகனங்களுக்கு ஆன்லைன் கேஸ் பதிவு செய்யப்படுகிறது.தற்போது ஆண்டுக்கு ஒரு வாகனத்திற்கு சுமார் 12 லிருந்து 24 ஆன்லைன் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பதியப்படும் ஆன்லைன் வழக்குகளை தீர்ப்பதற்கு சரியான தளம் இல்லாததும் வழக்குகள் நீதிமன்றத்துக்கு சென்று அங்கே தீர்க்கப்படாமலும் இருந்து வருகிறது. சம்பந்தமில்லாத ஒரு மாநிலத்தின் நீதிமன்றத்தில் சாதாரண லாரி உரிமையாளர் எவ்வாறு வழக்கை எதிர்கொண்டு தீர்க்க முடியும்?
Advertisement
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கு லாரிகளுக்கு ஏற்கனவே சாலை வரி, தேசிய அனுமதி கட்டணம், டீசல் மீதான செஸ் வரி உள்ளிட்டவற்றை செலுத்தி வரும் நிலையில், சாலை கட்டமைப்பு கட்டணம் வசூலிக்கப்பட்ட பிறகும் சுங்கச்சாவடி கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது நியாயமற்றது, சுங்கச்சாவடி ஒப்பந்த வசூல் விவரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அனைத்து டோல்கள் முன்பும் சம்பந்தப்பட்ட டோல் போடப்பட்ட தொகை எவ்வளவு தற்போது வரை வசூலித்தொகை எவ்வளவு வசூலுக்கு வேண்டிய தொகை போன்ற விவரங்களை பொதுமக்களும் அறியும் வண்ணம் பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்,
டீசல் விலை, கச்சா எண்ணெய் விலையின் உயர்வு, குறைவு நிலவரத்திற்கு ஏற்ப அதன் பயன்கள் பொதுமக்களுக்கும், டீசல் பயன்படுத்துபவர்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே, டீசல் கட்டண உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்.
பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கை முடிவுகள் குறித்து லாரி உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் மேலும் ,பழைய வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு தகுதி சான்று பெறும் கட்டணம் 10 முதல் 12 மடங்கு வரை உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்றது. நலிந்த பொருளாதார நிலையில் உள்ளவர்கள் தான் பழைய வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும், இந்த கட்டண உயர்வு அவர்களது வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் இதனால், ஒன்று அல்லது இரண்டு லாரிகள் வைத்திருக்கும் உரிமையாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
இதற்கான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் .மேலும், சரக்கு வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் எந்த வரைமுறையும் இன்றி அதிகரிக்கப்பட்டு வருவதால், லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறிய அவர், காப்பீட்டு கட்டணத்தை வரைமுறைப்படுத்தி, அதற்கான அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் இறுதியாக,லாரி உரிமையாளர்களின் தொழிலை அரசு அங்கீகரித்து, தனி நலவாரியம் அமைத்து வழங்க வேண்டும், இது லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News