கூலிப்பட்டி பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம் –திரளான பக்தர்கள் தரிசனம்!
மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.;
நாமக்கல்-துறையூர் சாலை, கூலிப்பட்டியில் பிரசித்திபெற்ற கந்தகிரி பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்,நடப்பாண்டில் தைப்பூச விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி பழனியாண்டவர் பூதவாகனம், ஆட்டுக்கிடா வாகனம், மயில் வாகனம், காமதேனு, கற்பக விருட்சம், ரிஷப வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர், திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி தலைமையில் உறுப்பினர்கள் பழனியப்பன், வருதராஜ், மீனா, நடராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.திருக்கல்யாண உற்சவத்தில் நாமக்கல், அலங்காநத்தம், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.