கைகளத்தூர் காவலர்கள் பணியிட மாற்றம்
வாலிபர் கொலை வழக்கில் ஜாதி வேறுபாடு இல்லை இருவரின் முன் பகை காரணமாகவே இந்த கொலை நடந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.;
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் காவல் நிலைய சரகம், கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற உடையார் இளைஞரும் மற்றும் மணிகண்டன் என்ற ஆதிதிராவிட இளைஞரும் அருண்குமார் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநர்களாக வேலை பார்க்கின்றனர். இருவரும் குடிபோதையில் அவ்வப்போது தகராறு செய்து கொண்டு இருந்துள்ளனர். அதேபோல 17.1.2025 ஆம் தேதி காலை 08.00 மணி அளவில் ஹைஃபை என்ற டீ கடையில் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டு ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக் கொண்டுள்ளனர். அப்போது தேவேந்திரன் குடிபோதையில் இருந்துள்ளார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அன்றைய தினம் 10.00 மணி அளவில் கைகளத்தூர் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவரின் வீட்டின் முன்பு தேவேந்திரன் அருவாளால் மணிகண்டன் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த காவலர் ஸ்ரீதர் உடனடியாக தேவேந்திரனை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் தனிப்பட்ட இரண்டு நபர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தால் நடந்ததாகும். சம்பவ இடத்தில் இருந்த காவலர் ஸ்ரீதர் மற்றும் அருண்குமார் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலர் ஸ்ரீதர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைகளத்தூர் காவல் நிலையத்தின் நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு உதவி ஆய்வாளர் சண்முகம் திருச்சி காவல் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர்கள் குமார், கொளஞ்சியப்பன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவேல் ஆகியோர் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இறந்த மணிகண்டன் மனைவிக்கு சட்ட ரீதியான இழப்பீடு வழங்குவதற்கு காவல் துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு முதல் தவணையாக 6 லட்சம் நிதி உதவி பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இக்கொலையில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. *காவல்துறை தரப்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.