உழவன் செயலி மூலம் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் விவரம் குறித்து அறியலாம்
வேளாண்மை;
தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, விவசாயிகள் உழவன் செயலியை தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை எளிதில் அறிந்து விவசாயிகள் பயன் பெறலாம். உழவன் செயலியினுள் சென்று 'தனியார் இயந்திர உரிமையாளர்கள் பற்றி அறிய' என்ற விவரத்தினை தேர்வு செய்து, பின்னர் 'அறுவடை இயந்திரங்கள் (Combine Harvester)' என்பதை தேர்வு செய்யவும். அதன் பின்னர் மாவட்டம் மற்றும் வட்டாரத்தினை தேர்ந்தெடுத்து 'தேடுக (search)' என்பதை தெரிவு செய்தவுடன் தங்களுக்கு தேவையான தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும். அதில் தங்களுக்கு தேவையான இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880/- எனவும், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,160/-எனவும் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தனியார் இயந்திரங்கள் மட்டுமின்றி வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்" என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.