ஒன்றிய நிதிநிலை அறிக்கை நகல் கிழித்தெறியும் போராட்டம்! அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சையில் நடைபெற்றது
போராட்டம்;
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து இதர உழைக்கும் மக்கள் உள்ளிட்டு யாருக்கும் எந்தவித பலனும் இல்லை. தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்து மக்களுக்கும் பலனளிக்காத, பயன்படாத, கார்ப்பரேட் சேவையை பின்பற்றுகின்ற ஒன்றிய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 6ஆம் தேதி பட்ஜெட் நகல் கிழித்தெறியும் போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பினை ஏற்று வியாழக்கிழமை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை நகல் கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார். நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட எந்த அம்சங்களும் இல்லை. நீண்ட காலமாக மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளான தொழிலாளர்கள் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் திரும்ப பெறுதல், மின்சார சட்டம், மோட்டார் வாகன சட்டங்கள் திரும்பப் பெறுவது, கார்ப்பரேட்டுகளுக்கான சேவையை நிறுத்துவது உள்ளிட்ட எந்த விதமான அம்சங்கள் இடம் பெறவில்லை. மேலும் காப்பீடு துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்களான நிலக்கரி, சுரங்கம், ஸ்டீல், துறைமுகம், கப்பல் துறை, விமானம், சாலைப்போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட துறைகளில் தனியார் தாராளமாக நுழைய அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழியும். வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். மக்களுக்கான சேவைகள் தொடர முடியாது என்ற நிலை தொடர்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்தும் அறிக்கையில் இல்லை. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டம் திரும்பப் பெறுவது உள்ளிட்ட அம்சங்களும் இல்லாதது. நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வால் அன்றாடம் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. 100 நாள் வேலை நாட்கள் அதிகப்படுத்த வேண்டும். நிதியினை இன்னும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து, ராஜேந்திரன், சோமசுந்தரம், ஏஐடியுசி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், வெ.சேவையா, துரை.மதிவாணன், தி.கோவிந்தராஜன், பொன்.தங்கவேலு சிஐடியு நிர்வாகிகள் கே.அன்பு, இடிஎஸ்.மூர்த்தி, சாய் சித்ரா, செங்குட்டுவன், ஜீவா, ஐஎன்டியுசி நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், ஏ.ரவி, ராமமூர்த்தி, வெங்கடாஜலம், பாரதிதாசன், ஏஐசிசிடியு நிர்வாகிகள் ரமேஷ், ஜெயபால், மாரியப்பன், நடராஜன், மக்கள் அதிகாரம் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தேவா, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் கோதண்டபாணி உள்ளிட்டார் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய நிதி நிலை அறிக்கை நகல் கிழித்தெறியப்பட்டு ஆர்ப்பாட்டம் துவங்கியது.