தைப்பூச விழா

முருகன் கோயிலில் நாளை தைப்பூச தேர்த்திருவிழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னேற்பாடு தயார்;

Update: 2025-02-10 11:28 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்ச மூர்த்தி புறப்பாடு வெள்ளி மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெற்று வந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் கைலயங்கிரி வாகன காட்சியும், இரவு காமதேனு வாகன காட்சியும் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி -தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ( 10ம் தேதி) நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு வள்ளி -தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகமும், காலை 5.30 மணி அளவில் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள். தேரோட்டத்தை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் தைப்பூச இசை விழா குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது. வருகிற 15-ம் தேதி இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சுகுமார், கோயில் செயல் அலுவலர் சரவணன், கண்காணிப்பாளர் மாணிக்கம் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News