பொதுத் தேர்வு

10-ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் அந்தந்த தேர்வு மையத்திற்கு அனுப்பி வைப்பு;

Update: 2025-02-13 08:22 GMT
ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான முகப்பு சீட்டுடன் கூடிய விடைத்தாள் அரசு தேர்வு துறை மூலமாக தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட அரசு தேர்வுகள் துறையினர் கூறியதாவது:- பிளஸ்- 2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 23-ம் தேதி வரையும், பிளஸ்- 1 பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் மாதம் 25-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. தற்போது, பிளஸ் -1 மற்றும் பிளஸ் -2 வகுப்புக்கான செய்முறை தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ்- 1 மற்றும் பிளஸ்- 2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களும் எத்தனை பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர், அவர்களது எண்ணிக்கை தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது தேர்வு எண், பாடப்பிரிவு போன்ற விவரங்களை பூர்த்தி செய்யும் முகப்பு தாள்(டாப் சீட்) தலைமையில் இருந்து அந்தந்த மாவட்ட தேர்வுகள் துறை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கும் முகப்பு சீட்டு வந்துள்ளது. முகப்பு சீட்டுடன், விடைத்தாள் மற்றும் இணைப்பு சீட்டு போன்றவை அரசு தேர்வுகள் துறை வாயிலாக ஒன்றாக இணைக்கும் பணி கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடந்து வந்தது. இதற்கு முன்பு வரை அந்தந்த தேர்வு மைய ஆசிரியர்கள் தான் மேற்கொண்டு வந்தனர். ஆனால், இந்த முறை தேர்வுகள் துறை மூலமாகவே இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் முகப்பு சீட்டு, இணைப்பு தாள் போன்றவை 5.50 லட்சம் எண்ணிக்கையில் தயார் செய்யப்பட்டு, அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பிளஸ்- 2 மற்றும் பிளஸ் -1 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் வாயிலாக மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வகுப்பாசிரியர்கள் மூலம் வழங்கப்படும் இன்டர்னல் மதிப்பெண்(அக மதிப்பெண்) ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்து விட்டது. விரைவில் செய்முறை தேர்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளின் மதிப்பெண்களை கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்.

Similar News