யானை அட்டகாசம்

தாளவாடி அருகே இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை வனதுறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்;

Update: 2025-02-13 08:25 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இங்கு குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம் போன்ற பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம் - பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உலா வருவதும் அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டுகள் இருக்கிறதா? என பார்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து அங்கு பயிரிட்டுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட திகனாரை கிராமத்திற்குள் நேற்று இரவு திடீரென ஒற்றை யானை புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. யானை கிராமத்துக்குள் புகுந்ததால் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து ஈடுபட்டிருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்குள்ள விவசாயிகளுடன் இணைந்து அந்த ஒற்றை யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பட்டாசுகளை வெடித்து அந்த யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டினர். இதன் பின்னரே வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் நிம்மதி பெரிமூச்சு விட்டனர்.

Similar News