சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல்

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.;

Update: 2025-02-14 07:04 GMT
மதுராந்தகத்திலிருந்து கக்கிலப்பேட்டை வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை அரையப்பாக்கம், கீழவலம், மேலவலம், ஈசூர், பூதுார், வல்லிபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், அரையப்பாக்கம் அருகே தனியாருக்குச் சொந்தமான ஆடை தயாரிப்பு தொழிற்சாலை செயல்படுகிறது. அதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பெண் பணியாளர்களை 'டிராவல்ஸ்' மற்றும் தனியார் பேருந்துகளில் அழைத்து வந்து, தொழிற்சாலைப் பகுதியில் இறக்கிவிடுகின்றனர். பின், வாகனங்களை அதே இடத்தில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருக்கழுக்குன்றம் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்துகள், போக்குவரத்து நெரிசல் காரணமாக, காலதாமதமாக செல்கின்றன. அப்பகுதியில், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News