வரி வசூல்
ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம் 4 மண்டலத்தில் தலா 100 பேர் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்;
ஈரோடு மாநகராட்சியின் 2024– -2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக மாநகராட்சி சார்பில் வரி கட்டணத்தை செலுத்த பொதுமக்களை கட்டாயப்படுத்தவில்லை. இருப்பினும், பொதுமக்கள் தாமாக முன் வந்து தங்களது வரிகளை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். இந்நிலையில், இடைத்தேர்தல் நிறைவின் காரணமாக, தற்போது மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூல் அலுவலர்கள் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு வரி வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வீடுகளுக்கு செல்லும் அலுவலர்கள், வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, பாக்கி வரிகளை நிலுவையின்றி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர். வரி தொகை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்றம் மூலம் ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தும் வருகின்றனர். மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வரியினங்களை எளிதாக செலுத்தும் வகையில், ஜி –பே,போன்– பே மூலம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியில், 4 மண்டலத்தில், தலா 100 பேர் என 400 பேர் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : - ஈரோடு மாநகராட்சியின் 2024– -2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 4 மண்டலத்தில் இருந்து தலா 100 பேர் என 400 பேர் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரி தொகை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்றம் மூலம் ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தும் வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.